மாடு வளர்க்கிறது என்ன பெரிய கம்பச் சூத்திரமா?’ என்று எண்ணாமல்,.

in business •  7 years ago 

image‘மாடு வளர்க்கிறது என்ன பெரிய கம்பச் சூத்திரமா?’ என்று எண்ணாமல், அறிவியல் ரீதியான வளர்ப்புமுறைகளைத் தெரிந்துகொண்டு மாடு வளர்ப்பில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம். image

"சூரிய ஒளி கொட்டகைக்குள் நேராக விழக் கூடாது. சமவெளிப் பகுதிகளில் கொட்டகை அமைக்கும்போது, கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும்."

பண்டையத் தமிழர்களின் வாழ்க்கைமுறை, கால்நடைகளோடு மிகவும் தொடர்புடையது. அன்று மாடுகளுடைய எண்ணிக்கையை வைத்துத்தான் ஒவ்வொருவரின் நிதிநிலைமையும் கணக்கிடப்பட்டது. நம் முன்னோர், நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் சத்தான (ஏ 2) பாலைத்தான் பருகினர். நிலத்தில் கிடைத்து வந்த வைக்கோல் உள்ளிட்ட தாவரக் கழிவுகளைத்தான் மாடுகளுக்கு உணவாகக் கொடுத்தனர். கிராமந்தோறும் மேய்ச்சல் நிலங்களும் இருந்தன. அதனால், கால்நடைகளுக்குச் சரிவிகித உணவு இயற்கையாகவே கிடைத்து வந்தது. ஆனால், இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. மாடுகளுக்கு வைக்கோல் அவசியமான தீவனம் என்பதால், அதைக் கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது.

மாடு வளர்ப்பில் இறங்கும்போது, தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மாடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தின் நாட்டுமாடுகள் நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு எளிதில் பொருந்தி வளரும் என்றாலும், அவற்றுக்குப் பால் உற்பத்தித்திறன் குறைவுதான். வெளி மாநிலங்களைப் பிறப்பிடமாகக்கொண்ட சிலவகை நாட்டுமாடுகள், நம் நாட்டுமாடுகளைவிடச் சற்று அதிகமாகப் பால் உற்பத்தித்திறன் கொண்டுள்ளன. தமிழக அரசு சார்பில், பால் உற்பத்திக்காகக் கலப்பின மாடுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. சமவெளிப் பகுதிகளுக்கு ‘ஜெர்சி’ ரகக் கலப்பின மாடுகளும், மலைப்பகுதிகளுக்கு ‘ஹெச்.எஃப்’ ரகக் கலப்பின மாடுகளும் ஏற்றவை.ஹெச்.எஃப்’ ரகக் கலப்பின மாடுகளைச் சமவெளிப் பகுதியில் வளர்க்கக் கூடாது.

மாடு வளர்ப்புக்குத் தீவனச் சாகுபடிக்கான நிலம் மற்றும் தண்ணீர் வசதி அவசியம். மேலும், வேலைக்கு ஆள்கள் கிடைக்கக்கூடிய பகுதியாகவும் இருக்க வேண்டும். ஆள் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட மாட்டுப் பண்ணைகள் அநேகம் உண்டு. முடிந்தவரை போக்குவரத்து வசதி, மின்சார வசதி இருக்கும் இடமாக இருப்பது நல்லது. மாடுகளுக்கான கொட்டகையை மேடான பகுதிகளில் அமைக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீர், சாணக் கழிவுகள் எளிதில் வடியும். கொட்டகைக்குள் கழிவுகள் தேங்கினால் கொசுக்கள் பெருகும். அது நோயை உருவாக்கும். கொட்டகைக்குள் நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். சூரிய ஒளி கொட்டகைக்குள் நேராக விழக் கூடாது. சமவெளிப் பகுதிகளில் கொட்டகை அமைக்கும்போது, கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். மலைப்பகுதிகளில் வடக்கு தெற்காக அமைக்க வேண்டும்.

காற்று வீசக்கூடிய பகுதியாக இருந்தால், கொட்டகையைச் சுற்றி 15 அடி இடைவெளி விட்டு மரங்கள் வளர்க்கலாம். அடுத்தடுத்து கொட்டகைகள் அமைப்பதாக இருந்தால், கொட்டகைகளுக்கான இடைவெளி 12 மீட்டர் இருக்க வேண்டும். கொட்டகைக்குள் இருக்கும் தரை, சாய்வாக இருக்க வேண்டும். பண்ணையில் போதுமான அளவு தண்ணீர்த் தொட்டியும், தீவனத்தொட்டியும் இருக்க வேண்டும். மாடுகளை நெருக்கமாகக் கட்டிவைத்தால் ஒரு மாட்டிலிருந்து இன்னொரு மாட்டுக்கு நோய்கள் தொற்ற வாய்ப்புண்டு. கொட்டகைக்குள் ஒரு மாட்டுக்கு 60 சதுர அடி இடம்கொடுக்க வேண்டும். கன்றுகளுக்கான இடவசதியும் இருக்க வேண்டும். இரு வரிசையாக மாடுகளைக் கட்டும்போது, நேரடியாக முகம் பார்க்குமாறு கட்டக் கூடாது. அப்படிக் கட்டினால் மூச்சுக்காற்றுமூலம் நோய்கள் பரவ வாய்ப்புண்டு. வெளிப் பண்ணைகளிலிருந்து அடிக்கடி மாடுகளை வாங்கி வரக் கூடாது. அப்படி வாங்கி வந்தால், உடனே மற்ற மாடுகளுடன் சேர்த்துக் கட்டக் கூடாது. புது மாடுகளைத் தனியாக ஒரு மாதம் வரை வைத்துப் பராமரித்த பிறகுதான், மற்ற மாடுகளோடு சேர்க்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் வயதான மாடுகள், நீண்ட நாள்களாகச் சினைப் பிடிக்காமல் இருக்கும் மாடுகள், சரிசெய்ய முடியாத நோய்களைக்கொண்ட மாடுகள் போன்றவற்றைக் கழிக்க வேண்டும்.

பத்து மாடுகளைப் பராமரிக்க இரண்டு பேர் தேவை. பத்து மாடுகள் வளர்க்க வேண்டுமென்றால், ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். பத்து சென்ட் நிலத்தைக் கொட்டகைக்கு ஒதுக்கிவிட்டு, 90 சென்ட் நிலத்தில் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். பத்து மாடுகளுக்கு, ஒரு நாளைக்கு 2 சென்ட் பரப்பில் உள்ள தீவனப் புல்களைக் கொடுக்க வேண்டும். சுழற்சி முறையில் தீவனப் பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். சில புல் வகைகள் குறுகியகாலப் பயிர்கள் என்பதால் அவற்றைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம். மாடு வளர்ப்பை நன்றாகத் தெரிந்துகொண்டு தொழிலில் இறங்கினால், நஷ்டம் வராது.

பசுந்தீவனம், தவிடு, உளுந்துப் பொட்டு, மாட்டுத்தீவனம் என்று கிடைப்பதையெல்லாம் மாடுகளுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால், சினை பிடிப்பதில் சிக்கல் உண்டாகும். ஏற்கெனவே சொன்னதுபோல, உலர் தீவனம், அடர்த்தீவனம், பசுந்தீவனம் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மாடுகள் ஆரோக்கியமாக வளரும். சரியான பருவங்களில் சினை பிடிக்கும். ‘மாடு வளர்க்கிறது என்ன பெரிய கம்பச் சூத்திரமா?’ என்று எண்ணாமல், அறிவியல் ரீதியான வளர்ப்புமுறைகளைத் தெரிந்துகொண்டு மாடு வளர்ப்பில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம்.

கருவூட்டல் ஊசி கவனம்...

இனச்சேர்க்கைக்காகப் பொலிகாளையோடு சேர்த்தாலும் சரி, செயற்கைக் கருவூட்டல் செய்தாலும் சரி... ஒரு காளை மூலமாகப் பிறந்த பசுவுக்கு, அதே காளையின் விந்தணுமூலம் சினை உண்டாவதைத் தவிர்க்க வேண்டும்.

இதனால், மரபியல் தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. ஒவ்வோர் உறைவிந்துக் குச்சியின் மேற்பகுதியிலும் மாட்டின் இனம், சேகரிப்பட்ட தேதி, இடம், மாட்டின் அடையாள எண் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். அதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கால்நடை வளர்ப்புப் பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்தூர் அடுத்த காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி மையத்தில் ஆண்டு முழுவதும் மாடு வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!