சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தது. தி.மு.க நிச்சயம் வெற்றிபெற்றுவிடும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்துவிட்ட நிலையில், அ.தி.மு.க அழிந்துவிடுமா? அல்லது அ.தி.மு.க வெற்றிபெற்றால் தி.மு.க அழிந்துவிடுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழத்தொடங்கியுள்ளன.
இச்சூழலில் திராவிடக் கட்சிகள் குறித்து பல்வேறு கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு வந்துள்ளன. அவை பின்வருமாறு
வாரிசு அரசியல்
ஊழல்
கார்ப்பரேட் கைகூலி
மக்களுக்கு எதிரான கொள்கைகள்
மதவாத சக்திகளுக்குத் துணை போகுதல்
சரி, அப்படியானால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு எந்த கட்சி மாற்றாக இருக்க இயலும். தற்போது போட்டியிட்ட கட்சிகளின் அடிப்படையில் நாம் இதற்கான தீர்வைக் காண்போம்.
நாம் தமிழர் கட்சி: தற்போதைய சூழலில் பல இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் திராவிடக் கட்சிகள் மீதான வெறுப்பு. இது தவிர மொழிரீதியாக கன்னடர், தெலுங்கர், ஆங்கிலேயர் என்று பிற மொழியைச் சார்ந்தவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள், அவர்களிடம் இருந்து தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வை மிகவும் ஆழமாக இந்தக் கட்சி இளைஞர்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இக்கட்சியின் பேச்சாளர்கள் சத்தத்தை அதிகமாக உயர்த்திப் பேசுவதுடன் நாட்டு நாய், நாட்டு மாடு வளர்ப்பு, வீட்டிலேயே பிரசவம் பார்த்தல் உள்ளிட்ட பாரம்பரிய கருத்தியல்களைக் கூறுவது உண்டு. அ.தி.மு.க அழியும்பட்சத்தில் அடுத்த இடத்திற்கு நாம் தமிழர் வந்துவிடும் என்பதில் வெகு சிலருக்கே சந்தேகம் இருக்கும்.
ஆனால், மேலே திராவிடக் கட்சிகளிடம் கூறப்பட்ட குறைகள் இங்கும் உள்ளன. 1. ”சீமான்” என்கிற ஒற்றை நபரைச் சுற்றியே இவர்களது கட்சி முழுமையும் சுழன்றுகொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட 19 நிர்வாகிகளில் 18 பேர் ஒரே சாதியைச் சார்ந்தவர்களாக இருப்பதால், இந்தக் கட்சியும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கட்சியாக மாறி வருகிறதோ என்கிற ஐயமும் மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது.
பிரபாகரன் குறித்து சீமான் அடிக்கடி கூறும் ஆமைக்கறி, இட்லிகறி கதைகள் பலரின் கேலிப்பேச்சுக்கு உள்ளாகி வருகின்றன.
தீக்குளித்து இறந்த கட்சித் தொண்டருக்காக வசூலித்த பணத்தில் பெரும்பகுதியை சீமான் சுரண்டிவிட்டார் என்றும், வெவ்வேறு ஆண்டு வருமான விவரங்களை வேட்புமனுவில் தாக்கல் செய்தார் என்கிற புகாரும் சீமான் மீது அடுக்கடுக்காகக் கூறப்படும் பல்வேறு புகார்களில் சில ஆகும்.
பா.ஜ.க-வின் மதரீதியான பாகுபாட்டிற்குச் சற்றும் சளைத்ததல்ல சீமானின் மொழிரீதியான வெறுப்புப்பேச்சு என்பது பலரது கருத்து. அதேபோல், உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல என்றும், கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அல்ல என்றும், சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள சமூகத்தினர் தமிழர்கள் தான் என்றும் கூறும் விஷயங்களில் இவர்களும் அதே வெறுப்பு அரசியலைக் கையாள்வதாக கருதப்படுகின்றனர்.
- மக்கள் நீதி மய்யம்
அதிமுக கட்சிக்கு எவ்வாறு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஒற்றை ஆளுமையாக இருந்தார்களோ அதேபோல் மக்கள் நீதி மய்யத்தைப் பொருத்தவரை கமல்ஹாசன் அத்தகைய ஒற்றை ஆளுமையாஅ இருக்கிறார். இவருக்குப் பிறகு யார் இவருடைய கட்சியை முன்சென்று நடத்துவார்கள் என்பதில் தற்போது தெளிவு எதுவும் இல்லை. 66 வயதைக் கடந்துவிட்ட நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 70களைத் தாண்டிவிடுவார். அதன் பின்னர் இக்கட்சியின் நிலை தற்போதைய அ.தி.மு.க-வின் நிலையாக மாறக்கூடும்.
கொள்கைரீதியாகப் பேசினால் கொள்கை என்று எதுவும் தமக்கு இல்லை மக்கள் நலனே எம் கொள்கை என்று கமல் கூறிவிட்டாலும், எந்த மக்கள் தங்கள் நலனை இவர் காப்பார் என்று நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்மொழிக்கொள்கை, அரசாங்கப் பொதுத்தேர்வு மாணவர்களின் திறனை முழுமையாகப் பரிசோதிப்பது இல்லை போன்ற கருத்துகளில் இவர் பா.ஜ.க-வுக்கு நிகரான கொள்கையையே கொண்டு இருக்கிறார்.
மருதநாயகம் திரைப்படத்திற்கு வாங்கிய கடனை மய்யம் கட்சிக்காக மக்கள் கொடுத்த நன்கொடையில் இருந்து திரும்பச் செலுத்தியதாக ஒரு வதந்தி நிலவுகிறது. சமூகரீதியான இட ஒதுக்கீட்டைப் பற்றிய கருத்திலும் இவருக்கும் இவருடைய கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் தெளிவில்லை என்பது இவர்கள் பதில் கூறுவதில் காட்டும் தயக்கத்தில் இருந்து வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
ஊழலுக்கு எதிரானக் கட்சியாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் இவருடைய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர்கள் காசோலை மோசடியில் சிக்கி இருப்பது இவரது நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
- கம்யூனிஸ்ட் கட்சி
இந்தக் கட்சியைப் பொருத்தவரை எந்த சாதிக்குமான கட்சி அல்ல. பல காலமாகவே மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியல் கிடையாது. தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை வந்தாலும் முதலில் போராட்டத்தில் இறங்குவது கம்யூனிஸ்ட் கட்சி தான். ஒரு தலைவர் இல்லாவிட்டாலும் சக தோழர்களில் மற்றொருவர் தலைமை தாங்கி நடத்தக்கூடியவர். உலகம் முழுவதும் இயங்கும் கட்சி ஆதலால் பிற்காலத்தில் இந்தியா முழுவதிலும் கூட பெருவாரியான இடங்களில் வெற்றிபெறலாம். கம்யூனிஸ்ட் சின்னமும் எல்லோருக்கும் அத்துப்படியான ஒரு சின்னம். எந்த கம்யூனிஸ்ட் தலைவர் மீதும் ஊழல் புகாரில்லை.
மதவாத சக்திகளை வேரறுப்பதற்காக அவ்வப்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அதிமுக அல்லது திமுக இல்லாமல்போகும்பட்சத்தில் மதவாதம் இல்லாத சித்தாந்தம் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் ஒரு நல்ல, அரசியல் மாண்புகள் நிறைந்த ஒரு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே என் ஆவல்.