Honesty

in honest •  7 years ago 
  • நேர்மைக்கு என்றுமே அழிவில்லை *

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்துவிட்டாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்…” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா… இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை. ஏன்னா… என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன… ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்.”

“அப்போது உங்கள் தந்தை உங்களிடம் கேட்டுக்கொண்டது அவர் அடியொற்றி செல்வீர்களா?”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்” என்று.

  • நிறைய உண்மை கலந்த கதை இது! * நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள் * ....உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும் , *நமது நாட்டையும் நேர்மைதான் காப்பாற்ற வேண்டும் .....ஆகவே மகிழ்ச்சியாக , நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம் ....

லஞ்சம் இல்லா சமுதாயத்தை நிச்சயமாகவே உருவாக்குவோம்

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: