முற்பிறவி கர்மாக்கள் ஒரு மனிதனை சுவாசத்தின் மூலமே தொடர்பு கொள்ளுகின்றன. இன்னும் ஆழமாக உள்ளே செல்வோமேயானால் மனிதன் சுவாசிப்பதற்கும், அவனது வாழ்க்கைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது.
உண்மையில் தாயின் வயிற்றில் வெளிச் சுவாசம் இன்றி இருக்கும் மனிதன், சுவாசிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்துதான் கிரகங்களின் ஆளுமைக்குள் வருகிறான்.
ஒரு மனிதன் ஒரு நாளுக்கு சுமார் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிக்கிறான். சுவாசத்தின் மூலமாகவே மனிதனின் உடலும், மனமும் இயங்குகின்றன. சுவாசம் நிற்கும் பொழுது அவனது உடலும், மனமும் இயங்குவதை நிறுத்திக் கொள்கிறது. அத்துடன் அவனது அந்தப் பிறவியின் கர்மா முற்றுப் பெறுகிறது. எனவே அனைத்திற்கும் அடிப்படை சுவாசம் மட்டுமே என்றாகிறது.
ஆதார மூலமான இந்த சுவாசம் மனிதனுக்கு காற்றின் மூலமாக தரப்படுகிறது. காற்றினை காலம் உருவாக்குகிறது. அந்தக் காலம் கிரகங்களால் உண்டானது. கோள்களின் கதிர்கள் மற்றும் ஈர்ப்புவிசை அமைப்புகள் காற்றின் மூலமாகவே, சுவாசமாகி மனிதனை இயக்குகின்றன. உலகின் அதி உன்னதமான நமது இந்து மதமும், அதன் முழு ஆன்மீகமும், சுவாசத்தின் அடிப்படையிலான தவம், தியானம் ஆகியவற்றின் மேல் தான் அமர்ந்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சுவாசத்தைக் கட்டுப்படுத்தியே நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு நமக்கு பல அருள் அற்புதங்களைப் பெற்றுத் தந்தார்கள். இதை இன்னும் நுட்பமாக இங்கே விவரிக்க ஆரம்பித்தால் இக் கட்டுரை ஜோதிடம் எனும் தளத்தை விட்டு விட்டு, வேறு வழிகளில் பயணிக்கும். எனவே இத்துடன் இதனை நிறுத்திக் கொண்டு சுவாசத்திற்கும், ஜோதிடத்தின் கால அளவிற்கும் உள்ள தொடர்புகளைப் பார்ப்போம்.
காலத்தின் ஆரம்ப அளவான சுவாசத்தின் ஒருநாள் மொத்த எண்ணிக்கையான 21,600 என்பதற்கும், ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்புகளை சில வருடங்களுக்கு முன் விளக்கியிருக்கிறேன். ஜோதிடத்தின் மாபெரும் பிரம்ம ரகசியமான பராசர மகரிஷியின் விம்சோத்திரி தசாபுக்தி வருடங்கள் பிரிக்கப்பட்ட விதத்திற்கும் இந்த 21,600 என்ற எண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது.
சுவாசத்தில் ஆரம்பிக்கும் காலமானது ஜோதிடத்தில் வருடம், மாதம், வாரம், ஹோரை என்று என்ற நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை நான்கிலும் நுட்பமான ஒருமணி நேர கால அளவு கொண்ட ஹோரைதான் அனைத்திலும் வலிமையானது என்று ஜோதிடம் சொல்கிறது.
ஒவ்வொரு மணி நேரமும், அந்த ஹோரையை நடத்தும் கிரகத்தின் ஆதிக்கத்தில் மனிதன் இருக்கிறான். அவனின் பிறப்பின் அடிப்படையில் அந்த ஹோரா கிரகம், அவனுக்கு, அப்போது எதைத் தருவதற்கு பொறுப்பேற்று இருக்கிறதோ, அது அந்த ஹோரையின் போது நடக்கிறது.
ஹோரை என்பது ஒருமணி நேரம் கொண்டது என்றாலும், அந்த ஹோரையையும் நான்கு நிமிடங்கள் கொண்ட பகுதிகளாக பிரிக்க முடியும். அந்த நான்கு நிமிடத்தையும் பிரித்து ஒரு நொடி அளவான சுவாச நேரமாக்க முடியும். அந்த அளவிற்கு ஜோதிடம் வெகு நுட்பமானது.
மனிதனின் ஒவ்வொரு நொடியோடும் ஒன்பது கிரகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தந்தக் கணத்தோடு எப்படி, எந்த வகையில் கிரகங்கள் இணைந்துள்ளன என்பதைப் பொருத்துத்தான் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சம்பவங்களின் மூலம்தான் மனிதனின் வாழ்க்கை அமைகிறது.
ஒன்பது கிரகங்களும் ஒருவருக்கு நன்மைகளை மட்டுமோ அல்லது தீமைகளை மட்டுமோ செய்து விடுவது இல்லை. ஒரு சம்பவம் என்பது கிரகங்களின் கூட்டுச் செயல். மனிதனின் பிறப்பின் அடிப்படையிலான
தசா, புக்தி, அந்தர கணக்குகளின் அடிப்படையில் ஹோரா கிரகமும் இணைந்து ஒரு மனிதனின் நல்லது, கெட்டதை நடத்துகிறது.
தனி மனிதனுக்கு ஒரு ஹோரை நன்மையைச் செய்யுமா அல்லது தீமையைச் செய்யுமா என்பதை அறிவதற்கு அவனது ஜாதகப்படி அந்த ஹோரையின் நாயகனான ஹோரா கிரகம் எத்தகைய தன்மையைக் கொண்டது என்பதை அறிய வேண்டியது அவசியம்.
ஜாதகப்படி ஹோரா கிரகம் நல்லதைத் தர வேண்டிய கோள் என்றால் ஆயுள் முழுவதும் அதன் ஹோரைகளில் நன்மைகள் நடக்கும். ஆயினும் நல்ல கிரகமாகவே இருந்தாலும் கூட ஹோரா கிரகம், கோட்சாரம் எனப்படும் அன்றைய கிரக அமைப்பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான் சம்பவங்கள் நடக்கும்.
நவ கிரகங்களில் ஒரு மனிதனுக்கு நான்கு கிரகங்கள் மட்டுமே நன்மைகளைத் தர விதிக்கப்பட்டவை. மீதி நான்கு கிரகங்கள் தீமைகளைத் தருவதற்கானவை. இறுதியான ஒன்று, இந்த எட்டிற்கும் நடுவில் செயல்பட்டு நன்மை - தீமைகளை கலந்து அளிக்கும் கிரகமாக இருக்கும்.
இதையே ஜோதிடம் குரு அணி, சுக்கிர அணி என்று பிரித்து சுக்கிர அணியின் லக்னங்களான ரிஷப-துலாம், மிதுனம்-கன்னி, மகரம்-கும்பம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் நன்மைகளை செய்யும் என்றும், குருவின் அணி லக்னங்களான மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது ஆகியவை நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறது.
இதன் அடிப்படையிலேயே ஹோரைகளும் பலன் தரும். அதாவது மேலே கண்ட சுக்கிர அணி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு, சுப ஹோரையான புதன் நல்ல பலன்களைத் தருவதைப் போல மேஷ, விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஹோரை நல்லவைகளைத் தருவது இல்லை.
அதேபோல குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவை சுப ஹோரைகளாக, நல்லவைகளை மட்டுமே தருவன என்று சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் இந்த ஹோரைகளில் நன்மைகள் மட்டும் நடப்பது இல்லை. இந்த ஹோரைகளில் தீமைகளும் நடப்பது உண்டு.
அதேபோல சனி, செவ்வாயின் ஹோரைகள் கெடுபலன்களை தருவதாக சொல்லப்பட்டாலும் அனைவருக்கும் இந்த ஹோரைகளில் கெடுபலன்கள் நடப்பது இல்லை. செவ்வாய், சனி ஹோரைகளில் நன்மைகள் நடப்பதும் உண்டு.
ஜோதிடத்தில் மேலோட்டமாக எதுவுமே இல்லை. அதேபோல பொதுப்படையாகவும் எதையும் சொல்லக் கூடாது. இதற்காகத்தான் அடிக்கடி நான் விதிகளை விட விதிவிலக்குகளையே அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எழுதவும், பேசவும் செய்கிறேன்.
ஹோரையின் ஒரு முக்கிய விதியாக, மேஷ, விருச்சிக லக்னத்தில் பிறந்தவருக்கு புதன் ஹோரையும், ரிஷப, துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஹோரையும், மிதுன-கன்னிக்கு செவ்வாய், கடக-சிம்மத்திற்கு சனி, மகரத்திற்கு சூரியன், கும்பத்திற்கு சந்திர ஹோரைகளும் நற்பலன் தருவது இல்லை.
ஹோரையைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு, கிரகங்களின் பகை, நட்பு போன்ற உறவு முறைகளை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பது அவசியம். மேலே சொன்ன லக்னங்களுக்கு மேற்படி கிரகங்கள் ஜாதகப்படி ஆறு, எட்டு அதிபதிகள் எனும் அமைப்பில் வருவார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் ஆறு, எட்டின் அதிபதி கிரகம் பகை நிலையில் நன்மைகளைச் செய்யாது.
அதேநேரத்தில் இதுவே முடிவானதும், இறுதியானதும் இல்லை. ஜாதகப்படி லக்னாதிபதி வலுவிழந்து ராசிப்படி பலன்கள் நடந்து கொண்டிருக்கும் அமைப்பில் அந்த ராசிப்படி ஆறு, எட்டின் அதிபதிகள் நல்லவை செய்யக் கூடியவர்களாக இருந்தால் நான் சொல்வது மாறும்.