இந்து லக்கினம் என்பது
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டிய பின் வரும் எண்ணை பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை, ராசியில் இருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிவடைகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னம் எனப்படும்.
இப்படிக் கணக்கிடப்படும் இந்து லக்னத்தில் இருக்கும் கிரகங்களின் தசை நடக்கும் போது ஒருமனிதன் அளவற்ற செல்வத்தையும், நன்மைகளையும் அடைவான் எனவும் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான் எனவும் மூலநூல்கள் சொல்கின்றன. இந்து லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டாலும் அந்த லக்னத்தைப் பார்க்கும் கிரகத்தின் தசையிலும், நற்பலன்கள் கிடைக்கும் என்று மகரிஷி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் கூறுகிறது.
இந்து லக்னம் காணும் போது, கூட்டி வரும் எண் 12 ஆல் வகுக்க முடியாமல் அதனுள் அடங்கிய சிறிய எண்ணாக இருந்தால், ராசியில் இருந்து அந்த எண்ணைக் கொண்டு அப்படியே எண்ணி, வரும் வீட்டினை இந்து லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் மிதுன லக்னம், மிதுன ராசியில் பிறந்திருந்தால் ஜென்ம லக்னமான மிதுனத்திற்கு ஒன்பதாம் அதிபதியான சனியின் எண் ஒன்றையும், ராசிக்கு ஒன்பதாம் அதிபதியான அதே சனியின் எண்ணான ஒன்றையும் கூட்ட மொத்தம் இரண்டு வருகிறது. இதை பனிரெண்டால் வகுக்க இயலாத நிலையில் கூட்டிய எண்ணான இரண்டை மிதுனத்தில் இருந்து எண்ணினால் கடகம் வரும். அதன்படி மிதுன லக்னம், மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்து லக்னமாக கடகம் வரும்.
அதேபோல பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண் பூஜ்யமாக வரும்போது, ராசிக்கு முந்திய வீட்டினை இந்து லக்னமாகக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலை கன்னி லக்னம், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு வரும். கன்னி, கும்பம் இரண்டின் ஒன்பதாம் அதிபதிகள் சுக்கிரன் ஒருவரே என்றாகி 12 ஐ 12 ஆல் கூட்ட வரும் 24 ஐ 12 ஆல் வகுக்கும் போது மீதி பூஜ்யம் என்று வருகின்ற நிலையில், கும்பத்திற்கு முந்தைய மகரத்தை இந்து லக்னமாக கொள்ள வேண்டும்.
மேம்போக்காக பார்க்கின்ற நிலையில் ஒருவரது ஜாதகம் யோகமற்றது போல தெரிந்தாலும் ஜாதகர் மிகவும் யோகமாக, அனைத்து வசதிகளுடனும் பெரும் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருப்பார். அதற்கு இந்த இந்து லக்ன அமைப்பு காரணமாக இருக்கும்.
அதேநேரத்தில் இந்து லக்னம் என்பது ஒரு துணை அமைப்பு மட்டும்தான். இந்து லக்னத்தில் கிரகம் இருந்தாலே அந்த கிரகத்தின் தசையில் கோடிகளைக் கொண்டு வந்து கொட்டி விடும் என்று சொல்லி விட முடியாது. ஜாதகத்தின் மற்ற அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு ஜாதகத்தின் ஆதார நாயகனான லக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில்தான் அனைத்து யோகங்களும் செயல்படும் என்பதை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். எத்தகைய யோகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க லக்னாதிபதியின் தயவு கண்டிப்பாகத் தேவை. லக்னாதிபதி வலுப்பெற்ற ஜாதகங்களில் இந்து லக்னத்தின் பலன்கள் மிக அதிகமாகவும், வலுக்குறைந்த ஜாதகங்களில் ஓரளவிற்கும் இருக்கும்.
ஒரே ஒரு விதியை மட்டுமே வைத்து ஜாதகத்தின் அனைத்து நிலைகளையும் கணிக்க முடியாது என்பது இந்து லக்னத்திற்கும் பொருந்தும். ஜோதிடம் என்பது நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொன்ன அனைத்து விதிகளையும் ஒரு சேர மனதில் கொண்டு வந்து, அதில் எந்தெந்த விதிகள் இந்த ஜாதகத்திற்குப் பொருந்துகிறது என்பதைச் சரியாகக் கணித்து பலன் அறிவதுதான்.
ஜோதிடம் பார்க்க
செல் 7904156630
https://youtube.com/channel/UCigYMUcwBMjQW6untqciBPg