ஒட்டாவா: கனடாவில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை சுமார் 50 டிகிரி செல்சியஸை எட்டியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளி முதல் திங்கள் வரையிலான 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 233 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் போனது கனடா நாடு. அங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள், தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இவ்வாரம் முழுவதும் ஆபத்தான மற்றும் வரலாறு காணாத வெப்ப அலைகள் இருக்கும் என சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.
இதுவரை இதுபோன்ற வெப்பத்தை அனுபவித்ததில்லை என அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதிக குடிநீர் பருகும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் கடும் வெயில்
அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு நகரங்களான போர்ட்லேண்ட், ஓரிகான், சியாட்டில், வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருப்பதாக கூறுகின்றனர். 1940 முதல் வெப்பநிலையை பதிவு செய்து வரும் இந்நகரங்களில் முதல் முறையாக வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அமெரிக்க வானிலை சேவையும் மக்களை குளிர்சாதன அறைகளில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படும் குடும்பத்தினரை கவனிக்கும் படி கூறியுள்ளது.