பாகம் மூன்று:
பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு செய்திகளை வாசிக்காமல், நேரடியாக இந்த பாகம் மூன்றை வாசிப்பவர்களுக்கு பணிவன்புடன் கூடிய ஒரு வேண்டுகோள்.
முதலில் பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு செய்திகளை வாசித்துவிட்டு, இந்த மூன்றாம் பாகத்தை வாசித்தால் உங்களுக்கு குழப்பம் ஏதும் ஏற்படாது. எனவே தயவு கூர்ந்து, முதலில் பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு செய்திகளை ஓரிரு முறைகளாவது வாசித்துவிட்டு, பின்பு இந்த மூன்றாம் பாகத்தை வாசித்து பயன் பெறுங்கள்.
இங்கே சொல்லப்படுகிற அனைத்து விஷயங்களும் நேர்மையான அடிப்படையில், உண்மையாக சொல்லப்படுகிறது. மற்றவர்களை தவறாக வழி நடத்தி, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சி இங்கே நீங்கள் எள்ளளவும் காண முடியாது. முழு நம்பிக்கையுடன், தொடர்ந்து ஒவ்வொரு பாகத்தையும் உங்கள் சுய விருப்பத்துடன் வாசித்து வாருங்கள். எந்தக் கட்டாயத்தின் பேரிலும், யாரும் இந்த செய்திகளை வாசிப்பதற்குக் கட்டாயப் படுத்தப்படவில்லை.
உங்கள் வாழ்க்கையில், நீங்களும் செல்வந்தராக முடியும் என்கிற விஷயத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக, எளிய நடைமுறையில் இங்கே நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். பொறுமையுடன் என்னுடைய எல்லா செய்திகளையும் நன்றாக புரிந்துகொண்டு வாசித்துவிட்டு, அவசரப்படாமல் நிதானமாக செயல்படுகிறவர்கள் அனைவருமே செல்வந்தராக முடியும். அதற்காக, இங்கே கால வரையறை ஒன்றும் கொடுக்கப்படவில்லை என்பதனை உங்கள் கவனத்தில் கொள்ளவும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். செல்வந்தர்கள் எப்போதும் கடைபிடிக்கும் சில நல்ல நடைமுறைகளை நாம் இங்கே கட்டாயம் கொஞ்சம் அலசிப்பார்க்க வேண்டியுள்ளது.
அந்த 10 சதவீத பணக்காரர்களுக்கும், மீதமுள்ள 90 சதவீதம் சாதாரண ஜனங்களுக்கும் இடையில் இருக்கிற நடைமுறை வித்தியாசங்கள் என்ன?
பணக்காரர்களுக்கும் சரி, நமக்கும் சரி எல்லோருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் மட்டுமே உள்ளது. இயற்கையின் இந்த மாறாத விதியை எந்த உலகப் பணக்காரர்களாலும் ஒரு நொடி கூட கூட்டவோ, குறைக்கவோ முடியவே முடியாது.
பணக்காரர்கள் TIME-MANAGEMENT பற்றி அதாவது ஒரு நாளில் இருக்கிற அந்த 24 மணி நேரங்களை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி தலைமுறை தலைமுறையாக மிகவும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் வசம் பணக்காரராவதற்கு எந்த ஒரு மந்திர சக்தியும் ( MAGICAL FORMULA ) இல்லை. அப்படியானால் பணக்காரர்கள் தலைமுறை தலைமுறையாக அப்படி என்னதான் செய்துகொண்டு வருகிறார்கள்?
நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லவேண்டுமானால், பணக்காரர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய வருமானத்தில் சரி / லாபத்திலும் சரி, முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு ( உதாரணமாக 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ) சேமித்து வைக்கிறார்கள். சேமித்தது போக மீதி இருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு தங்கள் அன்றாட அல்லது மாதாந்திர செலவுகளை எதிர்கொள்ளுகிறார்கள்.
மீதமுள்ள 90 சதவீதம் ஜனங்களாகிய நாம் அந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரை என்ன செய்கிறோம்? பிறருக்காக வேலை செய்து மாதச் சம்பளம் அல்லது வார சம்பளம் அல்லது நாள் சம்பளம் பெறுகிறோம். முதலில் சம்பளப்பணத்தை வைத்துக்கொண்டு எதிர்காலத்தைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நன்றாக செலவு செய்கிறோம். செலவு செய்தது போக மீதமிருந்தால் சேமிக்கிறோம்.
பணக்காரர்களோ தாங்கள் சேமித்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலமாகவும் சம்பாதிக்கிறார்கள். அதில் கிடைக்கிற இலாபத்தை கொண்டுதான், தங்கள் ஆடம்பர செலவுகளை சந்திக்கிறார்கள். ( உதாரணமாக, சொந்த வீடு, வாகனங்கள், விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் )
நாமோ வேறு மாதிரியாகவே எப்போதும் பணத்தை கையாளுகிறோம். நமது ஒரே வருமானத்தை கொண்டு நமது செலவுகள் அனைத்தையும் சந்திக்கிறோம். மாதத் தவணை முறையில் சொந்த வீடு, ஆடம்பரமான வாகனங்கள், மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் இத்யாதி இத்யாதி இவைகளை கிரெடிட் கார்டு மூலமாகவும், வங்கி கடன் மூலமாகவும் வாங்கிக்கொண்டே இருக்கிறோம். இதற்கு முடிவுதான் என்ன?
வேறென்ன, நாம் வாழ்நாள் முழுவதும், தொடர்ந்து கடன் வாங்கி பின்பு நாம் வாங்கின கடனை தவணை முறையில் வட்டியோடு சேர்த்து கட்டிக்கொண்டே இருக்கிறோம். இப்படியே நம் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. அப்படியானால் நமக்கு ஒரு விடிவு காலமே இல்லையா?
ஏன் இல்லை. நிச்சயமாக நம் எல்லோருக்குமே நல்ல ஒரு விடிவு காலம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம்தான் அந்த விடிவு காலத்தை பயன்படுத்திக்கொள்ள தவறி விடுகிறோம். இத்தனை காலம் நாம் இந்த விஷயத்தில் இவ்வளவு தூரம் அஜாக்கிரதையாக இருந்தது போதும். இனிமேலாவது விழித்துக்கொள்வோமா?
அது எப்படி என்பதனை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த செய்தியின் நான்காவது பாகத்தை தவறாமல் படியுங்கள். படித்துப் பயன் பெறுங்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் பணக்காரர் ஆகமுடியும் என்கிற நம்பிக்கையை மட்டும் தூக்கிப்போட்டு விடாதீர்கள்.