happy retirement
இந்த இருவரில் யார் புத்திசாலி?
இது கற்பனை கதை அல்ல, ஆனால் உண்மை சம்பவம்.
இரண்டு வாத்தியார்கள் ஒரே பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் ஒரே சம்பளம். இருவரும் ஒவ்வொரு மாதமும் சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்து வருகிறார்கள்.
அதில் ஒருவர், குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அவர் வாழும் ஊரிலேயே அவர் சேமித்த பணம் முழுவதையும் கொடுத்து ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அடுத்தபடியாக, வங்கியில் வீட்டு கடன் பெற்று, நல்ல ஒரு வசதியான வீடு இரண்டு படுக்கையறைகள் கொண்டதாக கட்டிக் குடியேறுகிறார். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகையை ஒழுங்காக கட்டி வருகிறார்.
அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். முதல் மகளுக்கு, retirement benefit அதாவது வேலையில் இருந்து ஓய்வு பெற்றதால் கிடைத்த பணத்தை கொண்டு கல்யாணம் செய்து வைக்கிறார்.
இப்பொழுது வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டபடியால், பென்ஷன் பணத்தை கொண்டு வாழ்க்கைத் தேவைகளை சந்திக்கிறார். இரண்டாவது மகளுக்கு திருமண வயது வருகிறது. தன்னுடைய சொந்த வீட்டை விற்று, அந்த இரண்டாவது மகளுக்கு திருமணம் நடத்தி முடிக்கிறார்.
இப்பொழுது, அவரும் அவருடைய மனைவியும் அவருக்குக் கிடைக்கும் பென்ஷன் பணத்தை ஒரு முதியோர் இல்லத்திற்கு கொடுத்து அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
அவருடன் வேலை பார்த்த மற்றொரு வாத்தியார் என்ன செய்கிறார் என்று பாருங்கள்:
ஒவ்வொரு மாதமும் தன்னுடைய சம்பளத்தில் குறைந்தபட்சம் 25% சேமிக்கிறார். ஒவ்வொரு வருடக் கடைசியில், தான் சேமித்த பணம் முழுவதையும் கொடுத்து தங்க நாணயம் வாங்கி வைத்துக் கொள்கிறார். 4 வருடங்களுக்கு ஒரு முறை, தன்னிடம் இருக்கிற தங்க நாணயம் அனைத்தையும் விற்று, தான் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிற அதே ஊருக்கு சற்று வெளியே அந்த பணத்தை கொண்டு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார்.
இதே மாதிரி ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொண்டு வருகிறார். அவர் வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது கிடைத்த பணத்தை அப்படியே வங்கியில் போட்டு வைக்கிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு திருமண வயது வரும்போது, தான் ஏற்கனவே வாங்கி போட்டிருந்த 10 கிரவுண்ட் நிலங்களில் இரண்டை நல்ல விலைக்கு விற்று கடனேதும் வாங்காமல், முதல் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். இதே மாதிரி, இரண்டாவது மகளுக்கும் இரண்டு கிரவுண்ட் நிலங்களை நல்ல விலைக்கு விற்று, கடனேதும் வாங்காமல் திருமணம் செய்து கொடுக்கிறார்.
அடுத்தபடியாக, மீதியாக இருக்கும் 6 கிரவுண்ட் நிலங்களில் 3 கிரவுண்ட் நிலங்களை நல்ல விலைக்கு விற்று, ஊருக்குள்ளே ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்குகிறார்.
அடுத்தபடியாக, மீதி இருக்கிற 3 கிரவுண்ட் நிலங்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வசதியான வீடு கட்டி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன் மனைவியுடன் இந்த வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.
வாத்தியார் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன் அதாவது ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும் ஓய்வு பெற்ற பின் கிடைத்த மொத்த பணத்தையும் வங்கியில் வய்ப்பு நிதியாக போட்டு விட்டபடியால், அதற்குண்டான வட்டியும் ஒவ்வொரு மாதமும் கிடைக்கிறது.
எனவே அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், வசதி குறையாமல், எந்தவித பொருளாதாரக் கஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் நிம்மதியாக வாழ்கிறார்.